செவ்வாய், ஜனவரி 10, 2012
மார்கழி 25, கர வருடம்
திருப்பாவை-பாடல் - 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: தேவகியின் மைந்தனாக பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் மறைந்து வளர்வதற்காகச் சென்றவனே! உன் பிறப்பை அறிந்த கம்சன், உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அவனது எண்ணத்தை குலைக்கும் வகையில், அவனது வயிற்றில் பயம் என்னும் நெருப்பை விளைவித்த திருமாலே! உன் அருள் வேண்டி வந்திருக்கிறோம். அதைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
விளக்கம்: பயத்தை அறவே விட்டொழிக்க வேண்டும், அது நெருப்பு போல் வயிற்றைக் கவ்வும். பல நோய்களுக்கு காரணம் பயமே. பயம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அன்பு வழியை நாட வேண்டும். கம்சன் அன்பை மறந்து இறைவனையே பகைவனாகக் கருதியதால் அழிந்தான்.
Born a son to some woman and the same night
Brought up a son concealed by some other
Thou had foiled the intent of Kanchan,
The intolerant harbouring animosity; and had
Stood upon his stomach a fire, inspir'd terror.
Oh! Hillock Tall, Divinity!
We have come unto Thee beseeching;
To solicit wealth which patroness would covet;
If Thou wouldst grant us the desire
We would sing Thy bravery, ridding grief entire
And be delight'd, listen and consider our damsel
திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 5
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எம்மை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! பஞ்சபூதங்களிலும் நீ இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை. புலவர்கள் உன்னுடைய சிறப்புஇயல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் உன்பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னைப் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.
அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.விளக்கம்: இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான். எனவே தான் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களையும் இறைவனாகப் பார்க்க வேண்டும். இயற்கைக்கு தரும் மரியாதை இறைவனுக்கு தரும் மரியாதையாகும்.
No comments:
Post a Comment