டிசம்பர், 25, 2011
மார்கழி 9, கர வருடம்
திருப்பாவை-பாடல் - 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
விளக்கம்: நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிலும் விளக்கெரிய,
திரவியங்கள் நறுமணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை நீண்ட நேரமாக அழைத்தும் அவள் பதில் சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் ஆட்கொண்டு விட்டதா? ஏதாவது மந்திரத்திற்கு ஆட்பட்டு எழ முடியாமல் ஆகி விட்டாளா? தோழியே! உடனே எழு. மாயங்கள் செய்பவன், மாதவன், வைகுண்டவாசன் என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்லி உருகிடு.
விளக்கம்: பஞ்சணை சுகம் உள்ளிட்டவற்றை தரும் ஆடம்பர உலகத்தில், பெறும் தற்காலிக சுகத்தால் இங்கேயே இருக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், நிரந்தர இன்பம் பரந்தாமனின் திருவடியில் தான். "தற்காலிகமா, நிரந்தரமா...முடிவு செய்ய வேண்டியது நீங்களே' என்கிறாள் ஆண்டாள்
Mansion studded with pure precious stones
Wicks of light all around gleaming
Asleep a couch perfume afloat;
Thou, uncle's daughter, unlock the door bedeck'd;
Auntie, would you arouse her?
Is your daughter dumb, deaf, lazy and dreaming?
Accurs'd to a grand sleep with a sentry?
Extol Him as Madhava,
Great Hypnotist, Mukuntha,
And so forth chant the Vaigunta;
Listen and consider, our damsel.
திருவெம்பாவைபாடல் - 9
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பொருள்: பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையானவனே! சிவபெருமானே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, கீழ்ப்படிதலுடன் செய்வோம். இந்த பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம்.
விளக்கம்: ஒழுக்கமுள்ள பக்திமானை பெண்கள் தங்கள் கணவராக மனமுவந்து ஏற்பர் என்பதை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது.