Monday, 19 December 2011

மார்கழி ,3

திங்கள் ,டிசம்பர்,19, 2011


மார்கழி ,3, கர வருடம் 


திருப்பாவை - பாடல் 3  ஆண்டாள் 

பாடிய திருப்பாவை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.

விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே!

திருவெம்பாவை - பாடல் 3   மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: முத்துப்பல் சிரிப்பால் மயக்கும் தோழியே! முன்பெல்லாம், நாங்கள் வந்து எழுப்பும் முன் நீயே எழுந்து இறைவனை வணங்க தயாராக இருப்பாய். சிவனே என் அதிபதி என்றும், இனியவன் என்றும் அழகாக பேசுவாய். இன்றோ, இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற,'' என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்தவள், ""களைப்பில் உறங்கி விட்டேன். அதற்காக, என் மீது கடுஞ்சொற்களை வீச வேண்டுமா? நீங்கள் பக்தி செலுத்துவதில் அனுபவஸ்தர்கள். நானோ புதியவள். இந்த இளையவள் செய்த தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே!'' என வருந்தினாள். தோழியர் அவளிடம், ""இளையவளே! இறைவன் மீது நீ வைத்துள்ள அன்பின் பெருமையும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை நினைக்க முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ விரைந்து எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்,'' என்றனர்.

விளக்கம்: இளமையில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒரு மாயை. இந்த நேரத்தில் இறைவனைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை. குடும்பத்தில் சிக்கி, பிள்ளைகள், உற்றார் உறவினரால் ஏற்படும் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து, முதுமையை எய்தும் போது தான் அவன் நினைப்பு வருகிறது. எனவே இளமையிலேயே இறைவனை வணங்குங்கள் என்கிறார் மாணிக்கவாசகர்.


No comments:

Post a Comment