Wednesday 4 January 2012

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் ஏன்?

பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.
ஏகாதசியன்று இரட்டை சாப்பாடு
ஏகாதசி குறித்து, ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!! என்ற ஸ்லோகம் இருக்கிறது.
இதில் வரும் போஜந த்வயம் என்ற வார்த்தைக்கு ஏகாதசிநாளில் இருமுறை சாப்பிடுங்கள் என்று அர்த்தம். ஏகாதசியன்று பட்டினியல்லவா இருக்க வேண்டும். இதென்ன என யோசிக்கிறீர்களா? போஜன என்பதை போ ஜன என்று பிரித்து பொருள் சொல்ல வேண்டும். ஹே! ஜனங்களே! என்பது இதன் பொருள். ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டியது இரண்டு. உபவாசமாக பட்டினியிருப்பதும், இறைவனின் பெருமைகளைக் கேட்பதுமாகும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.

No comments:

Post a Comment