Wednesday 4 January 2012

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!

வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!
 
நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான். அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது; ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும்  ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம்.

ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?
 
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர:! ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி!! என்னும் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.
ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது.
நிர்ஜலா ஏகாதசி: வியாசர் தர்மரிடம் ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். அங்கிருந்த பீமன், தானும் விரதமிருக்க ஆவல் கொண்டான். ஆனால், அவனால் பசி தாங்க முடியாது. அதிகமாக சாப்பிடுவது அவனது வழக்கம். வியாசரிடம், ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏகாதசி விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும், என்றார் அவர். பீமனும் விரதமிருந்து பலனும் பெற்றான். ஆனியில் வரும் ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்பர்.
ரங்கநாதர் ஸ்தோத்திரம்: வைகுண்ட ஏகாதசியான இன்று ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்.
* காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.
* கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்!
* மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்ரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.
* பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.
* ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?
* எம்பெருமானே! தேவேலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.
* அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது, என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.

3 comments:

  1. அன்புடையீர்,

    உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

    http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_11.html

    தங்கள் தகவலுக்காக!

    நட்புடன்

    ஆதி வெங்கட்
    திருவரங்கம்

    ReplyDelete
  2. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    --------------------------------------------------------------------------------------------------------------------------
    குறிப்பு- வலைத்தள உறவுகள் கேட்டதற்கு அமைவாக
    தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம் வாருங்கள் வாருங்கள் (காலம் நீடிக்கப்பட்டுள்ளது.) பதிவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதி அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு..இங்கே-https://2008rupan.wordpress.com
    http://tamilkkavitaikalcom.blogspot.com/ இந்த இரண்டு வலைப்பூக்களில் விபரம் உள்ளது.
    பதக்கங்கள்+சான்றிதழ் அள்ளிச்செல்லுங்கள்.......
    --------------------------------------------------------------------------------------------------------------------------------

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஏகாதசி விரதம் பற்றி அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete